என்ன விலை,Enna Vilai
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு: கலாமயா பிலிம்ஸ்
இயக்கம்: சஜீவ் பழூர்
நடிப்பு: கருணாஸ், விஜயலட்சுமி வீரமணி, நிமிஷா சஜயன், மோகன் ராமன், சுவாமிநாதன்
ஒளிப்பதிவு: ஆல்பி ஆண்டனி
இசை: சாம்.சி.எஸ்
வெளியான தேதி: செப் 17, 2026
நேரம்: 2 மணி 04 நிமிடங்கள்
ரேட்டிங்: 3 / 5

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நேர்த்திக்கடனாக பக்தர்கள் போடும் நாணயங்கள், பொருள்களை சேகரிக்கும் மீனவர் கருணாஸ். அவர் கையில் விலை மதிப்புமிக்க ஒரு தங்கப்பதக்கம் சிக்குகிறது. அதை போலீஸில் ஒப்படைக்கிறார். ஆனாலும் போலீசாரின் பேராசை காரணமாக கருணாசுக்கு திருடன் பட்டம் கிடைக்கிறது. அவர் ஜெயிலுக்கு போகிறார். நேர்மையான வக்கீல் நிமிஷா சஜயன் அவருக்காக வாதாடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த அரிய பதக்கம், அரசுக்கு சொந்தமா? கருணாசுக்கு சொந்தமா? என்ற கேள்வியும் எழுகிறது. கருணாஸ் அந்த சட்ட சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அந்த பதக்கம் கடைசியில் யாருக்கு சொந்தம் ஆகிறது என்பது சஜுவ் பழூர் இயக்கிய 'என்ன விலை' படத்தின் கதை.

மலையாள திரை உலகில் முன்னணி எழுத்தாளரும் தேசிய விருது பெற்றவருமான சஜீவ் பழூர் ஒரு முக்கியமான உணர்ச்சிபூர்வமான பிரச்னையை மையமாக வைத்து எடுத்திருக்கும் படம் என்ன விலை. அரசாங்கம், சட்டம், தனிமனித உரிமை, மீனவர் நலன், அதிகாரம் என பல விஷயங்களில் ,பல கேள்விகளை எழுப்புகிறது இந்த கதை.

அன்பான கணவராக பாசமான அப்பாவாக அப்பாவி மீனவராக தவசி முத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார் கருணாஸ். அவரின் வழக்கமான காமெடி டோன் எங்கும் இல்லை. போலீஸ் பிடியில் சிக்கி அடி வாங்குவது, குடும்பத்திற்காக தவிப்பது, கடைசியில் மீடியா அரசு அதிகாரம் துரத்த என்ன செய்வது என தத்தளிப்பது உட்பட பல இடங்களில் அவர் நடிப்பு ரசிகர்களை கவர்க்கிறது. அவர் கேரக்டர் மூலமாக அரசாங்கம், சட்டத்துறையை விமர்சிக்கிறார் இயக்குனர்
அதேசமயம் இடைவேளைக்கு பின் அவர் கேரக்டரை டம்மியாக்கி நிமிஷா சஜயனுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கருணாஸ் மனைவியாக நடித்துள்ள விஜயலட்சுமி வீரமணி தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. இயல்பான கிராமத்து பெண்ணாக கலக்கி இருக்கிறார் அதேபோல கருணாஸ் தங்கையாக வரும் ஷாஷாவும் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

படத்தின் உயிர் நாடி கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள், விவாதங்கள் தான் நேர்மையான வக்கீலாக, ஒரு ஏழை அப்பாவி மீனவருக்காக வாதாடும் கேரக்டரில் நிமிஷா சஜயன் நடிப்பு , வாத திறமை பளீச். குறிப்பாக இடைவேளைக்கு பின் கோர்ட்டில் அவர் கேட்கும் கேள்விகள் சட்ட பிரச்னைகள் மனித உரிமைக்காக அவர் கொடுக்கும் குரல், சினிமா தாண்டி பல கேள்விகளை எழுப்புகிறது. நிமிஷாவின் க்ளோசப் ஷாட்ஸ், நறுக் வசனங்கள் படத்தை விறுவிறுப்பாக்கிறது. தமிழ் சினிமாவில் சிறந்த கோர்ட் காட்சிகள் என்றால் நிமிஷாவும் நினைவுக்கு வருவார். காதல், பாடல், ஹீரோ இல்லாமல் தனி ஆளாக அவரும் கலக்கி இருக்கிறார்

கடலில் கிடைக்கும் ஒரு பொருள் அரசாங்கத்துக்கு சொந்தமா? மீனவருக்கு சொந்தமா என்ற கரு படத்தில் புதுமை. அதுவே ஒரு கட்டத்தில் ஓவர் டோஸ் ஆகி, முதல்வர் தலையிட்டு சமரசம் செய்து, சில விஷயங்களை செய்யும் அளவுக்கு போவது சினிமா தனம். அந்த இடங்களை இன்னும் இயல்பாக எடுத்து இருக்கலாம்

கோர்ட் காட்சிகளில் நிஷாவுக்கு எதிராக வாதாடும் அரசு தரப்பு வக்கீலாக லொள்ளு சபா சுவாமிநாதன், ஒய் ஜி மகேந்திரன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் அனைவர் நடிப்பிலும் நாடகத்தனம் . கிளைமாக்சில் கௌரவ வேடத்தில் ஜட்ஜ் ஆக வரும் பூர்ணிமா பாக்யராஜ், முதல்வராக வரும் பிரபு கேரக்டர் நடிப்பு படத்துக்கு பிளஸ். அவர்களை இன்னும் அதிக சீன்களில் பயன்படுத்தி இருக்கலாம். கெட்ட போலீசாக வரும் மோகன் ராமன் நடிப்பும், மற்ற படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. மலையாள இயக்குனர் என்பதால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சின்ன, சின்ன கேரக்டர் உட்பட பலரையும் சிறப்பாக நடிக்க வைத்து இருக்கிறார்.

சாம் சி.எஸ் இசை, ஆல்வின் ஒளிப்பதிவு ஆகியவை ராமேஸ்வரம் வாழ்வியலை அழகாக காண்பித்துள்ளது. பெரும்பாலான கதை ராமேஸ்வரத்தில் நடக்கிறது. மீதி கதை கோர்ட்டில் நடக்கிறது. அதனால் ஆடல், பாடல், காமெடி போன்ற விஷயங்கள் குறைவு. மீடியா சம்பந்தப்பட்ட விஷயங்கள், பில்டப்பை குறைத்து இருக்கலாம்

போலீஸ், அதிகார வர்க்கத்தால் ஒரு தனி மனிதன் குடும்பம் பாதிக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் தன் மான இழப்புக்கு, ஏற்படும் பாதிப்புகளுக்கு என்ன விலை. சட்ட ரீதியாக அதை வாங்கி கொடுக்க முடியுமா என்ற விஷயத்தை படம் பேசுகிறது. ஆனால் இயக்குனர் எழுப்பும் சில கேள்வி ஓகே. பல கேள்விகள் "கேள்விக்கு' உள்ளாகிறது. இதெல்லாம் நடைமுறைக்கு செட் ஆகாதே? ஏன் படத்தை இழுக்கிறார்கள் என பார்வையாளர்கள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அது படத்துக்கு மைனஸ்.

ஒரு புது கதைக்களத்தில், புது சட்டவிவாதத்தை எளிய மனிதர்கள் பின்னணியில் எழுப்பி இருப்பது புதுமை. என்ன, அதை உணர்ச்சி பூர்வமாக சொன்னாலும் அழுத்தமாக சொல்லவில்லை. கோர்ட் டிராமா விரும்பிகளுக்கு படம் ரொம்ப பிடிக்கும்

என்ன விலை - இழப்புகளுக்கு, உரிமைகளுக்கு என்ன விலை என கேட்கும் கதை

 

என்ன விலை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

என்ன விலை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓