'வாரணாசி' படம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்த பிரித்விராஜ் சுகுமாரன்! | சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஓடிடி தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது! | சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' ஓடிடி ஒப்பந்தம் முடிந்தது! விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | பிளாஷ்பேக்: அடிதடி நாயகன் ரஜினியை, அமைதி நாயகனாய் காட்டிய “ஆறிலிருந்து அறுபதுவரை” | உடை பற்றிய விமர்சனம்: ஐஸ்வர்யா லக்ஷ்மி காட்டம் | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் 'ஜாக்கி - நோ ரீடேக்ஸ் அலவுட்' | துல்கர் சல்மான், நயன்தாரா பிடிக்கும்: வரலட்சுமி நிகழ்ச்சியில் பி.வி.சிந்து | ரசிகர்கள் கவனிக்கத் தவறிய தமிழ் சினிமாக்களின் 10 லாஜிக் தவறுகள்! | 'மூக்குத்தி அம்மன் 2' டீசர் வெளியீடு: நவ.6ல் படம் ரிலீஸ் | அஜித்துக்கு 'மினியேச்சர்' ரேஸ் கார் பரிசளித்த முதல்வர் விஜய் |

சினிமா உலகில் கதாநாயக நடிகனுக்கு என அதுவரை வரையறுக்கப்பட்டு வைத்திருந்த வரையறைகள் அனைத்தையும் வதம் செய்து, வளமான உடல்மொழி, வற்றாத நடிப்பு, என்ற இவ்விரண்டின் துணை கொண்டு, வானளாவ உயர முடியும் என்ற உண்மையை கலையுலகிற்கு உணர்த்திய முதல் திரைக்கலைஞர் நடிகர் ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
“அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, “மூன்று முடிச்சு”, “அவர்கள்”, “16 வயதினிலே”, “ஆடுபுலி ஆட்டம்”, “காயத்ரி”, “மாங்குடி மைனர்” போன்ற பல திரைப்படங்களில் ஒரு மிரட்டும் வில்லனாக ஆரம்ப காலங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் நெருங்கிய இவருக்கு, 1978ல் வெளிவந்த “பைரவி” திரைப்படம் இவரது வேறொரு பரிமாணத்தைக் காட்டிய திரைப்படமாக அமைந்திருந்தது.
இந்த “பைரவி” திரைப்படத்திற்குப் பின் வெளிவந்த இவரது “தாய் மீது சத்தியம்”, “ப்ரியா”, “குப்பத்து ராஜா”, “தர்மயுத்தம்” போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவரை ஒரு ஆக்ஷன் ஹீரோ என்ற அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ரசிகர்களும் இவரது வித்தியாசமான ஸ்டைல் நிறைந்த சண்டைக் காட்சிகள், இவரது உடல் மொழி ஆகியவற்றால் வெகுவாக ஈர்க்கப்பட, இதுதான் தனது கலைப்பயணத்திற்கான சரியான பாணி என தீர்மானித்து, அதுமாதிரியான திரைப்படங்களிலேயே தொடர்ந்து நடிக்க விரும்பிய நடிகர் ரஜினிகாந்திற்கு வந்த ஒரு வித்தியாசமான சினிமா வாய்ப்புதான் இந்த “ஆறிலிருந்து அறுபதுவரை” என்ற திரைப்பட வாய்ப்பு.
இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை, தான் நடித்திருந்த திரைப்படங்களில் தன்னை ஒரு பொழுதுபோக்கு நடிகராகவே பார்த்துப் பழகியிருந்த தனது ரசிகர்கள், ஆக்ஷன் காட்சிகள் ஏதுமின்றி, ஒரு அழுத்தமான, அமைதியான கதாபாத்திரத்தில் தான் நடிப்பதை ஏற்றுக் கொள்வார்களா? என்ற அச்சமும், சந்தேகமும் அப்போது எழுந்தது நடிகர் ரஜினிகாந்திற்கு.
நிலைமையைப் புரிந்து கொண்ட படத்தின் இயக்குநர் எஸ் பி முத்துராமன், அதுவரை எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டிருந்த படத்தின் காட்சிகளை நடிகர் ரஜினிகாந்திற்குப் போட்டுக் காட்டி, அவரை சமாதானம் செய்ய, அதன் பின்னர் முழு வீச்சுடன் ரஜினிகாந்த் தனது பங்களிப்பை வழங்கி, படத்தை முடிக்க ஒத்துழைப்பு நல்கினார். படத்தில் இளமை மற்றும் முதுமை ஆகிய இருவேறு தோற்றங்களில் நடித்திருந்த நடிகர் ரஜினிகாந்த்தின் ஒப்பனையை கவனித்துக் கொண்டவர் ஒப்பனையாளர் ஆர் சுந்தரமூர்த்தி. அறுபது வயது முதியவர் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்தை காட்டுவதற்காக ஒப்பனையாளர் ஆர் சுந்தரமூர்த்திக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது லியோ டால்ஸ்டாயின் உருவம் மட்டுமே.
தனது வித்தியாசமான உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், ஸ்டைலான ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்களைத் தன்வயப் படுத்தி வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னால் உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களிலும் நடித்து படத்தை வெற்றியடையச் செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டிய ஒரு திரைப்படமாக வந்ததுதான் இந்த “ஆறிலிருந்து அறுபதுவரை”. ரஜினிகாந்த், படாபட் ஜெயலக்ஷ்மி, சங்கீதா, சோ, ஜெயா, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், டி கே பகவதி, திலக், எல் ஐ சி நரசிம்மன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தை, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தனது “பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்திருந்ததோடு, படத்தின் கதை, வசனம், பாடல்களையும் எழுதியிருந்தார்.
படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. “கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ” என்ற இப்படப் பாடல் இன்றும் பலரது விருப்பப் பாடல்களின் வரிசையில் முதலிடம் பிடித்த பாடலாகவே இருந்து வருகின்றது. 1979ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று வெளிவந்த இத்திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்த ஒரு திரைப்படமாகவும், தன்னால் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களிலும் ஜொலிக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நிரூபித்திருந்த திரைப்படமாகவும் வெளிவந்து, சென்னை 'மிட்லண்ட்' திரையரங்கில் மட்டும் 25 வாரங்கள் வரை ஓடி, வெள்ளி விழா கண்ட திரைப்படமாக வாகை சூடியது இந்த “ஆறிலிருந்து அறுபதுவரை”.