மீண்டும் மீண்டும் வாய்ப்பு... : டைரக்டர், ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஹிஸ்டரி! | ஓடிடி டிரெண்டிங்கில் சூரியின் 'மண்டாடி' | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்படுகிறதா 'ராமாயணா'? | விஜய் சந்திப்பை தவிர்த்தாரா பவன் கல்யாண்? | நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா திரிஷா? | ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் சாய் பல்லவி! | 'ரணபாலி' எனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என்கிறார் விஜய் தேவரகொண்டா! | ஜெயிலர் 2 : 1.1 மில்லியன் கடந்த அமெரிக்க பிரிமியர் முன்பதிவு | ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ஒரு தலைவர் : அனிருத் பதிவு | ஜெயிலர் 2 ரிலீஸ் : சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் படக்குழு |

ஒரு படம் மிக ரசிக்கும்படியாக அமைவதற்கு அதன் ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி பொருத்தமாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் அதைவிட டைரக்டர், ஹீரோயின் கெமிஸ்ட்ரி முக்கியம். அந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அந்த டைரக்டருக்கே நடிகைகள் மனைவியான கதை உலக சினிமா முழுக்கவே ஏராளம் உண்டு. அந்தக் கதை அவர்கள் சொந்தக் கதை. நாம் டேக் டைவர்ஷன் எடுத்து, தங்கள் படங்களில் ஒரே கதாநாயகிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்த சில டைரக்டர்களின் பட்டியலைப் பார்ப்போம்.
பாலசந்தர்
தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை மிகச் சக்தி வாய்ந்ததாகவும், முற்போக்கான சிந்தனை கொண்டவர்களாகவும் சித்தரிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாலசந்தர். இவரது படங்களில் அதிகம் தோன்றிய கதாநாயகிகள் சுஜாதாவும் சரிதாவும். ஆனாலும் பாலசந்தர், சரிதா காம்போ அபாரமானது. தனது 'தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவை அறிமுகப்படுத்தியவர், வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, கல்கி என்று அதிகப்படங்களில் நடிக்க வைத்தார்.
பாரதிராஜா
முகபாவங்களில் பெண்மை வழிந்தோட நடிகைகளுக்கு வெட்கப்படுவது எப்படி என்று பாரதிராஜா நடிப்பு சொல்லித்தருகிற காட்சியே அலாதியானது. பாலசந்தரைப்போலவே பாரதிராஜாவும் தனது பெண் கதாபாத்திரங்களில் பல புதுமைகளைப் புகுத்தியவர். அலைகள் ஓய்வதில்லை ராதா, மண்வாசனை ரேவதி, கிழக்கே போகும் ரயில் ராதிகா, மூவருமே பாரதிராஜாவின் முக்கிய நாயகிகள்தான் என்றாலும் முதல் மரியாதையில் ரீ என்ட்ரி கொடுத்து ஹிஸ்டரியில் இடம் பிடித்தவர் ராதாதான்.
பாலுமகேந்திரா
இவரது ஆதர்ஷ நாயகியான ஷோபா அகால மரணமடைந்துவிட, 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' படத்தில் ஒரு குட்டிப்பெண்ணாக கூட்டத்தோடு கூட்டமாக ஆடிய மவுனிகா, 'ரெட்டைவால் குருவி', வண்ண வண்ணப்பூக்கள், மற்றும் அவரது தொலைக்காட்சித் தொடர்கள் என்று தொடர்ச்சியாக நடித்து வந்தார். ஆனாலும் முதல் இடம் அர்ச்சனாவுக்குத்தான். நீங்கள் கேட்டவை, வீடு, சந்தியா ராகம், சக்கர வியூகம் [தெலுங்கு] என்று அர்ச்சனா பாலுமகேந்திரா படங்களில் நிறைந்து நின்றார்.
பாக்யராஜ்
தனது மூத்த பா வரிசை இயக்குநர்கள் போல் இல்லாமல் தனது படங்களின் கதாநாயகிகளை ராதா, அம்பிகா, ஊர்வசி, சுலக்ஷனா என்று அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் பாக்யராஜ். ஆனாலும் 'பாமா ருக்மணி'யில் ஜோடி சேர்ந்த ராதிகா அடுத்து 'இன்று போய் நாளை வா', 'பொய் சாட்சி', 'தாவணிக்கனவுகள்' என்று 4 படங்களில் ஜோடி போட்டு டாப் ஸ்கோரராக நிற்கிறார்.
மணிரத்னம்
மணிரத்னத்தின் மனசைக் கொய்த நடிகை என்பவர் அவரது 'பம்பாய்', 'உயிரே' படங்களில் நடித்த மனிஷா கொய்ராலாதான் என்றாலும் அவரது படங்களில் அதிகம் நடித்தவர் இந்நாளும் உலக அழகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் தான். இருவரில் தொடங்கிய இவர்களது கூட்டணி, 'குரு', 'ராவணன்', 'பொன்னியின் செல்வன்','பொன்னியின் செல்வன் 2' என்று ஐந்து படங்கள் வரை தொட்டுத்தொடர்ந்திருக்கிறது.
ஷங்கர்
இந்தப் பட்டியலில், கதாநாயகிகள் விஷயத்தில் சற்று அதிர்ச்சி தரக் கூடியவர் இயக்குநர் ஷங்கர். 33 வருடங்களில் 12 படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் அவர் மனிஷா கொய்ராலா, ஐஸ்வர்யா [ஜீன்ஸ், எந்திரன், இந்தியன், முதல்வன்] ஆகிய இருவரை மட்டுமே இரண்டாவது படத்துக்கும் ரிப்பீட் செய்திருக்கிறார். மற்ற நாயகிகளுக்கு எல்லாம் ஒரு படத்தோடு டாட்டா.
இதற்கு அடுத்த கட்ட இயக்குநர்களில் செல்வராகவன் சோனியா அகர்வாலுடன் 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி','புதுப்பேட்டை' ஆகிய மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார். சேரன் மீனாவுடன் 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்' என இரு படங்களில் பணியாற்றி அடுத்தடுத்த படங்களுக்கு வெவ்வேறு ஹீரோயின்களை கமிட் செய்திருக்கிறார். பாலாவும் கூட லைலாவுடன் 'நந்தா', 'பிதாமகன்' என ஜஸ்ட் இரண்டே படங்கள் என ரிப்பீட் கதைகள் அவ்வளவாக தென்படவில்லை.
ஆனால் … இந்தப் பட்டியலில் மிகக் குறைவாக ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், 'கற்றது தமிழ்' தொடங்கி கடந்த வாரம் ரிலீஸான 'ஏழு கடல் ஏழு மலை வரை ஐந்து படங்களில் அஞ்சலியுடன் பயணித்திருக்கிறார் இயக்குநர் ராம். பொதுவாக ராம் படங்களில் ஜனங்கள் அவ்வளவு சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான குறியீடுகள் இருக்கும். இந்த அஞ்சலிக்கு தன் படங்களில் அடிக்கடி வழங்குவதற்கான குறியீட்டை பிறகொரு சந்தர்ப்பத்தில் ராமே, இன்னொரு ரயில் வண்டிப் பயணத்தில் மனம் திறந்து சொல்லும் வரை அந்த கம்பார்ட்மென்டிலேயே காத்திருப்போம்.