Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பான் இந்தியா படங்கள்… பட்ஜெட் 1000 கோடி… ஆனால்? உதவி இயக்குநர்களின் பரிதாப உலகம்!

24 நவ, 2026 - 06:45 IST
எழுத்தின் அளவு:
Pan-India-films...-budget-1000-crores...-but-Assistant-director-life-in-struggle
Advertisement

சொற்ப லட்சங்களில் துவங்கப்பட்ட தமிழ் சினிமா இன்று பெருங்கோடிகளில் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், அன்றும் இன்றும் என்றும் மாறாத பரிதாப உலகம் உதவி இயக்குநர்களுடையது.

வண்ணக் கனவுகளோடு சினிமாவுக்கு வந்து, இயக்குநர் நாற்காலியைத் தேடி அலைந்து, கடைசியில் வாழ்க்கையையே தொலைத்துவிடும் ஒரு தலைமுறையின் கண்ணீர்க் கதை இது.

தமிழ் சினிமாவில் ஒரு படம் உருவாகிறது என்றால் அதன் பின்னால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலருடைய பெயர்கள் திரையில் மின்னுகின்றன. ஆனால் அந்தப் படத்தின் உருவாக்கத்தில் இரவு பகலாக உழைக்கும் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை மட்டும் பெரும்பாலும் இருட்டிலேயே கிடக்கிறது.
அவர்கள்தான் உதவி இயக்குநர்கள்!

ஒரு நாள் இயக்குநர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு சென்னைக்கு வருகிறார்கள். கையில் ஒரு கதையோ, சிறிய குறிப்பேடோ, மனதுக்குள் ஆயிரம் கனவுகளோடு சினிமா அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்கள். ஆனால் அவர்கள் கடந்து செல்லும் பாதை அத்தனை எளிதானதா?

கனவு காணும் வாழ்க்கை யாவும்

பெரும்பாலான உதவி இயக்குநர்களுக்கு சினிமா என்பது வெறும் தொழில் அல்ல. அது ஒரு காதல். ஒரு லட்சியம். தன்னுடைய பெயர் ஒருநாள் பெரிய திரையில் இயக்குநராக இடம்பெற வேண்டும் என்ற பேராசை. கிராமத்திலிருந்து வருபவர்கள் இருக்கிறார்கள். சிறிய நகரங்களிலிருந்து வருபவர்கள் இருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரிகளில் படித்துவிட்டு வருபவர்கள் இருக்கிறார்கள். எந்தவிதமான சினிமா அனுபவமும் இல்லாமல் நேரடியாக இயக்குநரிடம் உதவியாளராகச் சேர்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சென்னைக்கு வந்த பிறகுதான் அவர்களுக்குச் சினிமாவின் இன்னொரு கோர முகம் தெரிய ஆரம்பிக்கிறது.

சம்பளம் இல்லாத உழைப்பு!

உதவி இயக்குநர்களின் உலகத்தில் முதலில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை சம்பளம். வெகு சில படங்களில் மட்டுமே உதவி இயக்குநர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் இன்னும் சில தயாரிப்புகளில் குறைவான ஊதியம், தாமதமான ஊதியம், சில நேரங்களில் ஊதியமே இல்லாத உழைப்பு என்ற நிலையும் இருக்கிறது.

காலை ஆறு மணிக்கு படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றால் இரவு எப்போது வீடு திரும்புவோம் என்பது தெரியாது. நடிகர்களை அழைப்பது, காட்சிகளைத் தயார்படுத்துவது, வசனங்களைச் சரிபார்ப்பது, தொடர்ச்சியை (Continuity) கவனிப்பது, இயக்குநரின் தேவைகளை நிறைவேற்றுவது, அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வேலைகளை முடிப்பது என்று ஓய்வில்லாத வேலை. ஒரு படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களுடைய வேலை முடிவதில்லை. அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வேலை அப்போதுதான் தொடங்குகிறது.

இயக்குநரின் அடிமைகள்!

ஒரு இயக்குநரின் கற்பனையைத் திரையில் கொண்டு வருவதில் உதவி இயக்குநர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் அந்த உழைப்புக்கான அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைக்கிறதா? இயக்குநரின் கோபத்தையும் தயாரிப்பாளரின் நெருக்கடியையும் நடிகர்களின் மனநிலையையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய சூழல் பல படப்பிடிப்புத் தளங்களில் இருக்கிறது. கதை விவாதம் முதல் படப்பிடிப்புத் தளத்தில் பொருட்கள் வாங்கி வருவது வரை எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குடும்ப வாழ்க்கை கோவிந்தா

உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்படுவது குடும்ப உறவுகள். திருமணம் செய்துகொள்ள முடியாமல் காலத்தைக் கடத்துபவர்கள் இருக்கிறார்கள். திருமணமான பிறகும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். வாடகை கொடுக்க முடியாமல் நண்பர்களுடன் அறையைப் பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள் இருக்கிறார்கள். வீட்டிலிருந்து பணம் வாங்கிக் காலம் தள்ளுபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெற்றோர்களிடமிருந்து வரும் கேள்வி ஒன்றுதான்:

"எத்தனை வருஷம்தான் இப்படி உதவி இயக்குநராகவே இருக்கப் போகிறாய்?"

இந்த கேள்விக்கு பதிலை தெரிந்துகொள்வதற்கு முன் அவர்களது மொத்த வாழ்க்கையும் முடிந்துபோயிருக்கும்.

களவுத் தொழிற்சாலை

இவர்கள் உலகத்தில் நடக்கும் இன்னொரு அநீதி கதைத் திருட்டு. உதவி இயக்குநர்கள் தங்களுடைய அனுபவத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் கதைகளை உருவாக்குகிறார்கள். அவற்றை இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் அந்தக் கதைகள் களவாடப்படுகிற சம்பவங்களைத்தான் அதிகம் கேள்விப்படுகிறோம். கதைக்கரு, காட்சிகள், திரைக்கதை ஆகியவற்றின் உரிமை தொடர்பாகப் பலருக்கும் தெளிவான புரிதல் இருப்பதில்லை. தங்களுடைய பொக்கிஷ கன்டென்டுகள் சுடப்பட்டதாக சில உதவி இயக்குநர்கள் குற்றம்சாட்டுவதும் உண்டு. ஆனால் அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான குரல்கள் இங்கே எப்போதும் இல்லை.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் உருவாகின்றன. புதிய இயக்குநர்கள் அறிமுகமாகிறார்கள். புதிய கதாநாயகர்கள் வருகிறார்கள். புதிய தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. ஆனால் அந்தப் படங்களுக்குப் பின்னால் உழைக்கும் உதவி இயக்குநர்களின் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு நிச்சயமற்றதாக இருக்கிறது? நட்சத்திரங்களின் சம்பளங்கள் கோடிகளில் இருக்கின்றன. வெற்றிபெற்ற சில இயக்குநர்களுமே கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் ஒரு உதவி இயக்குநரின் ஒரு நாள் சம்பளம் எனப்படும் பேட்டா இப்போதுதான் இருநூறு ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஒரு இயக்குநரின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய உதவி இயக்குநர்களின் உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உதவி இயக்குநர்களின் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?

ஒரு நல்ல படத்தை உருவாக்குவதற்கு இயக்குநருக்கு எத்தனை உரிமைகள் இருக்கின்றனவோ, அதே சினிமாவில் தன்னுடைய வாழ்க்கையை உருவாக்குவதற்கு உதவி இயக்குநருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அந்த உரிமை குறித்து இங்கே யாருக்கும் அக்கறை இல்லை.

சினிமாவை நேசித்த ஒரே காரணத்துக்காக இங்கே ஒருவர் தன்னுடைய இளமையையும் குடும்பத்தையும் சுயமரியாதையையும் பணயம் வைத்தே பயணிக்க வேண்டியிருக்கிறது. இயக்குநர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக இருக்கும் உதவி இயக்குநர்களின் வாழ்க்கையைப் பற்றி தமிழ் சினிமா எப்போது கவலைப்படப் போகிறது? அவர்கள் கேட்பது பெரிய சம்பளமோ, நட்சத்திர அந்தஸ்தோ அல்ல. அவர்கள் கேட்பதெல்லாம் உழைப்புக்கான மரியாதையும், வாழ்வதற்கான ஊதியமும், தங்களுடைய கனவை நனவாக்குவதற்கான ஒரு வாய்ப்பும்தான்!

இதை, ஒரு காலத்தில் உதவி இயக்குநராக இருந்து இன்று இயக்குநர்களாக உயர்ந்திருப்பவர்களே கூட மறந்து விடுகிறார்கள் என்பதுதான் சினிமாவின் சாபம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜேம்ஸ் பாண்ட் : 60 ஆண்டுகளைக் கடந்த உளவாளியின் முழு வரலாறு! - சீன் கானரி முதல் ராபர்ட் பேட்டின்சன் வரை...!!ஜேம்ஸ் பாண்ட் : 60 ஆண்டுகளைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap